Sunday, August 30, 2009

ஸ்ரீமது மலைப்பெருமாள் சுவாமிகளின் 157வது குருபூஜைசிவமயம்

ஸ்ரீமது மலைப்பெருமாள் சுவாமிகளின் 157வது குருபூஜை

ஸ்ரீமது மலைப்பெருமாள் சுவாமிகளின் 157வது குருபூஜை விரோதி வருடம் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளன்று -29.8.2009 அன்று நடைப்பெற்றது.

விழா நாளன்று சுவாமிகளுக்கு விஷேச மூலிகைகளால் அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது.

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் மக நட்சத்திர நன்னாளில் கோயில் கொடியேற்றி பத்து தினங்கள் தினமும் அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெறும்.


Wednesday, May 20, 2009

ஆலத்தூர் ஸ்ரீ மலைப்பெருமாள் சித்தர் வரலாறு


ஆலத்தூர் ஸ்ரீ மலைப்பெருமாள் சித்தர்

நாகை மாவட்டம் ,திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆலத்தூர் கிராமம். அந்த அழகிய கிராமத்தில் பழம் பெருமை துலங்க சிறப்பு காட்சி தருகிறது அருட் சித்தர் ஸ்ரீ மலைப்பெருமாள் சுவாமிகளின் திருக்கோயில்.
இவர், நாகை மாவட்டம், பொறையாறு வட்டம், காட்டுச்சேரியில் செட்டியார் மரபில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றினார். பாலக வயதிலேயே தன் பெற்றோரை இழந்த அவர், தன் சிற்றன்னையையும் அவரது குழந்தைகளையும் காக்கும் கடினமான பொறுப்பை ஏற்றார்.
அதற்காக ஆப்பிரிக்க நாட்டின் சான்சிபர் நகருக்குச் சென்று வருமானத்திற்காக உழைக்க ஆரம்பித்தார். ஆனால், நிரந்தர வேலை அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும், தாயாரின் வேண்டுகோளின்படி ஊருக்குத் திரும்பிவந்த அவர், தோற்றத்திலும் செய்கையிலும் முற்றிலும் மாறியிருந்தார். எப்போதும் தனித்திருக்கவே அவர் விரும்பினார்.
உலகியல் வாழ்வில் அவர் நாட்டம் காட்டாதது பலரை திகைப்படையச் செய்தது. அடிக்கடி காணாமல் போய்விடுவார். அப்படித்தான் ஒருமுறை காட்டுச்சேரியை விட்டுச் சென்றவர் பல நாட்களாகியும் திரும்பவில்லை. ஆனால், திரும்பி வந்தபோது அவர் துறவியாக இருந்தார். தன் சிற்றன்னையிடம், ‘‘என் உயிருக்குத் தாய் இறைவனே, அவனருளே எனக்கு எல்லாம் இனி. உங்கள் எல்லோரையும் அந்தத் திருவருள் காக்கும்’’ என்று உறுதியாகச் சொன்னார்; குடும்பத்தை விட்டுப் பிரிந்து போனார். ஆலத்தூருக்கு அருகே உள்ளது, தூதுபோன மூலை என்னும் சிற்றூர். அங்கே பெரிய தம்பிப் பிள்ளை என்பவர், பெரும் பரப்பிலான விளை நில சொந்தக்காரர், சிறந்த சிவபக்தர்.
ஒவ்வொரு வருடமும் மார்கழி திருவாதிரை திருநாளன்று நடராஜர் தரிசனம் காணச் செல்வார். குறிப்பிட்ட வருடத்தில் அவ்வாறு செய்ய இயலாதவாறு அவரது நிலத்தில் விவசாய வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அவரது உடல் வயல் வரப்பில் இருந்தாலும் உள்ளம் மட்டும் சிதம்பரத்திலேயே ஒன்றிப்போய் ஏக்கத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது அவ்வழியே வந்தார் மலைப்பெருமாள் சுவாமி. அவருடைய வருத்தத்தைப் புரிந்துகொண்டார். ‘‘சிதம்பர தரிசனம் தானே பார்க்க வேண்டும்? இப்போதே பார்க்கலாம். கண்களை மூடிக்கொண்டு என் தோளினை நன்கு பிடித்துக் கொள்’’ என்றார். அவரிடம் தோன்றிய தெய்வீக ஒளியில் தன்னை மறந்த பிள்ளை உடனே கண்களை மூடிக்கொண்டு சுவாமியின் தோள்களை நன்கு பற்றிக் கொண்டார். ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு, ‘‘கண்களைத் திற’’ என்றார், சுவாமி.
பிள்ளை கண்களைத் திறந்து பார்த்தபோது சிதம்பரம் தேரடிக்கு அருகில் இருப்பதை உணர்ந்தார். ‘‘நீராடித் தரிசனம் செய்து வருக!’’ என்றார் சுவாமி. அளவிலா ஆனந்தம் அடைந்த பிள்ளை, உடனே சென்று நீராடி, நடராஜப் பெருமானின் திவ்ய தரிசனம் கண்டு, பிரசாதம் பெற்று மகிழ்ச்சி மேலிட, மீண்டும் தேரடிக்கு வந்து சுவாமியை வணங்கி நின்றார்.
அவரும் ‘‘மீண்டும் முன்போல கண்களை மூடிக்கொண்டு என் தோள்களைப் பற்றிக்கொள்’’ என்றார். பிள்ளையும் அவ்வாறே செய்ய, அடுத்த சில விநாடிகளுக்குள் அவர் ஆலத்தூர் வயல்வெளியில் இருந்தார். திகைப்பால் திக்குமுக்காடிப்போன பிள்ளை, மாலையில் வீட்டிற்குச் சென்று, மனைவி & மக்களிடம் சிதம்பரம் கோயில் பிரசாதத்தைத் தந்து சுவாமியின் அற்புதச் செயலைச் சொல்லிப் போற்றிக் கொண்டாடினார்.
மறுநாள் பொழுது புலர்ந்ததும் ‘‘மலைப்பெருமாள் சுவாமி பெரிய சித்தர். அவருக்கு எவரும் சிறு தீங்கும் செய்தல் கூடாது; அவருக்கு இடையூறு செய்பவர் தண்டிக்கப்படுவர்’’ என்ற பறை அறிவித்தார் பிள்ளை. அது மட்டுமா? சுவாமி இருந்த காட்டைச் சீர் செய்து மாமரத்தில் கயிறு கட்டி அதில் அமரவும் செய்வித்தார். அப்பகுதியைச் சித்தருக்கு உரிமை செய்து கொடுத்ததோடு ஐந்துமா நன்செய் நிலத்தையும் அவருக்குச் சாசனம் செய்து வைத்தார். ஒரு புன்சிரிப்புடன் தன்னைச் சுற்றி நடப்பவை களையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார் சுவாமி. சுவாமிகள் தம் அருள் செய்கையால் பலருக்கும் வாழ்வளித்துக் கொண்டிருந்தார். அவரின் பெருமையைச் செவியுற்ற பலர் தம் நோய் தீர அவரை நாடி ஓடி வந்தனர். வயிற்று வலியென வந்தவர் பூரண நலம் பெற்றுச் சென்றனர். நெஞ்சு நோயென வந்தவர் நெடுநாள் நலம் கொண்டு சென்றனர். பேய் பிசாசென அஞ்சியவர் அச்சம் நீங்கி, அமைதி பெற்றுச் சென்றனர். சுவாமியின் சித்தாடல்களை எல்லாம் கேட்டு மனம் மகிழ்ந்த சிற்றன்னை ஆனையாத்தாள் அவரைக் காண மிகுந்த பாசத்தோடு காட்டுச்சேரியிலிருந்து வந்தார்.
தாயைக் கண்டதும் சுவாமி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தான் கொண்டு வந்திருந்த பிட்டையும் வடையையும் ஒரு தாம்பாளத்தில் வைத்துச் சித்தரிடம் பரிவோடு நீட்ட, அவரும் அதனை வாங்கிச் சிறிது பிட்டையும் வடையையும் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, தம்மைச் சுற்றி இருந்த அன்பர்கள் அனைவருக்கும் தம் கரத்தாலேயே அப்பண்டங்களை வழங்கினார்.
அன்று முதற்கொண்டு சுவாமிக்குப் பிட்டும், வடையும் வைத்துப் படைக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. முன்பெல்லாம், ஆலத்தூர் மக்கள் சித்திரை வருடப் பிறப்புத் திருநாளில் விழுதியூர் மாரியம்மனை வழிபடுவதற்காகத் திரண்டு செல்வார்கள். வழிபாட்டுக்காக ஊர்விட்டு ஊர் செல்லும் மக்களிடம் இரக்கம் கொண்ட சுவாமி, அவ்வூரிலேயே மாரியம்மன் ஆலயம் அமைக்க எண்ணம் கொண்டார். “திருமலைராயன்பட்டினத்-தின் எல்லையில் வாஞ்சூர் பால் குளத்தின் கன்னிமூலையில் அம்மன் இருக்கிறாள்.
ஒரு வண்டியைக் கட்டிக்கொண்டு போய்க் கொண்டு வாருங்கள்!” என்றார் சுவாமி. அதேபோல சிலை கிடைக்க, குளுந்தாளம்மன் என்று பெயரிட்டு அம்மனுக்கு சுவாமியின் ஆசியுடன் கோயில் எழுப்பினார்கள். ஆலத்தூர் மக்களெல்லாம் ஊரு விட்டு ஊரு போகவேண்டிய அவசியம் இல்லாமல் தம் ஊரிலேயே அம்மனைக் கொண்டாடினார்கள்.
அம்மனுக்குக் கோயில் எழுப்பித் தந்த சுவாமிக்கும் கோயில் கட்டும் எண்ணம் ஊர் மக்களிடையே பரவலாக எழுந்தது. அவர்களுடைய அன்புள்ளம் புரிந்து, சுவாமியே தம் கால்களால் அளந்து கயிறு கட்டித் தர, கோயில் கட்டும் திருப்பணி தொடங்கியது. கோயில் முழுமையடைய மேலும் பணம் தேவைப்பட்டதால் சுப்பப் பிள்ளை என்பவர் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்று தம் வணிகத்தை வளப்படுத்தி, பொருள் ஈட்டி வருவதாகக் கூறிச் சென்றார்.
ஒருநாள் இரவு, சுவாமி, பிள்ளையின் கனவில் தோன்றி “இவன் விரைவில் உலக வாழ்விலிருந்து விடுபடப் போகிறான். இவனுக்கெனக் கட்டப்படும் கோயிலில் இவன் சமாதி நிலை அடையும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் ஆலத்தூர் வந்து சேர். எல்லாம் நலமாகும்’’ என்றுரைத்தார்.
விருட்டென விழித்தெழுந்த பிள்ளை உடனே புறப்பட்டு வந்து சுவாமியின் பாதங்களில் பதறி விழுந்து அழுதார். அவரைக் கனிவோடு தூக்கி நிறுத்திய சுவாமி, “ஆவணி மாதம், மூல நட்சத்திரத்தன்று இரவு பன்னிரண்டு மணிக்கு இவன் சமாதி நிலையில் இருப்பான். அப்பொழுது இந்தக் கட்டையிலிருந்து வியர்வைப் பெருக்கெடுக்கும். உடனே இவ்வுடலை மூடும்படியாகத் திருநீற்றைக் கொட்டுக, பின்னர் திருநீறு உலர்ந்ததும், அதனைக் களைந்து பத்திரப்படுத்தி யாவர்க்கும் வழங்கி நோய்களை வென்று எல்லா நலன்களையும் பெற்று வாழ்க!” என்றார். அதைக் கேட்டு மனம் பேதலித்த பிள்ளை, சுவாமியின் யோசனைப்படி ஒரு ஓவியர் மூலம் அவர் உருவை வரையச் சொல்லி வாங்கி வைத்துக்கொண்டார். சுவாமி குறிப்பிட்ட ஆவணி மூலத்திருநாளும் வந்தது. சுவாமி, பிள்ளையை அழைத்து, “இன்று பன்னிரண்டு மணிக்குச் சமாதி ஆகப் போகிறேன்.
இதனை மலைப்பெருமாள் என்றே வழிபடு. எல்லாப் பேறுகளும் பெறுவாய்” என்று தம் கரத்தை நீவி அதிலிருந்து ஓர் எலும்புத் துண்டை எடுத்துப் பிள்ளையின் கையில் வழங்கினார். பிள்ளையும் அதனைப் பணிந்து போற்றி வாங்கிக் கொண்டார். (அவ்வெலும்பை இன்றும் ஆலந்தூரில் அவரது மரபில் வந்தவரின் இல்லத்தில் காணலாம்.) சுவாமி சுப்பப் பிள்ளையைப் பார்த்து மேலும் சொன்னார்: “கோயில் கருவறையில் அமைக்கப்-பட்டுள்ள சமாதியினுள் முதலில் என்னை வடக்கு முகமாக வை; மூடி விடாதே; மூன்றாம் நாள் நான் கிழக்கு முகமாக இருப்பேன். அதன்பின் என் சமாதியை மூடிவிடு! நான் முக்தி பெற்ற பிறகு, ஓர் அன்பன் தானே மனமுவந்து ஒரு காசி லிங்கம் தருவான். அதனை என் சமாதி மேல் வைத்துவிடு. ஒரு சிவாச்சார்யார் வந்து எனக்கு பூஜை செய்ய விரும்புவார். அவருக்கு அனுமதி கொடு” என்றார். பிறகு சித்தர் மாமரக் கயிற்றிலிருந்து இறங்கி மெல்ல நடந்து வந்து சின்முத்திரையைக் காட்டியபடி சமாதி நிலையில் அமர்ந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் சுவாமியின் உடலிலிருந்து வியர்வை பெருக்கெடுக்க, பிள்ளையும் அவர் மனைவியாரும் திருநீற்றைச் சுவாமியின் உடல் மீது கொட்டி மூடினர். சற்றைக்கெல்லாம் திருநீறு, வியர்வை நீர் வற்றி உலர்ந்தது.
இருவரும் அதனைக் களைந்து எடுத்துப் பத்திரப்படுத்தினர். பின்னர் சுவாமிக்குச் சந்தனம் பூசி, பன்னீர் தெளித்து பூமாலைகள் அணிவித்து, விலை உயர்ந்த நார்முடியைத் தலைப்பாகையாகக் கட்டித் தூப தீபம் காட்டிக் கைகூப்ப, சுவாமியின் அருட் கண்கள் திறந்து அவர்களைப் பார்த்து பிறகு மூடிக் கொண்டன.
சாலிவாகன சகாப்தம், 1774&ல் கலியுகம் 4953 பரிதாபி வருடம், ஆவணி மாதம் (1852 ஆகஸ்டு) 11&ம் நாள் புதன்கிழமை, பூர்வபட்சம் ஏகாதசி திதி, மூலநட்சத்திரத்தில் இரவு மணி பன்னிரண்டுக்குச் சுவாமி இறைவனோடு ஐக்கியமாகிவிட்டார்கள். சுவாமியின் புகழ் நான்கு திசைகளிலும் பரவியது. மயிலாடுதுறையிலிருந்து வந்த ஓர் அன்பர், “சுவாமியின் சமாதியில் பிரதிஷ்டை செய்வதற்கு அடியேன் வழங்கும் லிங்கத்தை ஏற்றருள வேண்டும்’’ என்று சுப்பப் பிள்ளையிடம் விண்ணப்பித்தார்.
நல்லதோர் நாளில் சமாதியில் லிங்கப் பிரதிஷ்டை சாஸ்திர முறைப்படி நடந்தேறியது. சிறிது காலத்திற்குப் பிறகு ஒருநாள் வேதாகமங்கள் அறிந்த சிவாச்சாரியார் ஒருவர் சுவாமியை வழிபட்ட பின்பு அங்கிருந்து மீள மனம் இல்லாதவராக சுப்பப் பிள்ளையிடம், “அடியேன் இக்கோயிலில் பூஜை செய்ய ஆசைப்படுகிறேன். அனுமதிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
பிள்ளையும் பெரிதும் மகிழ்ந்து பூஜை கைங்கரியத்தை அவரிடமே வழங்கினார். மலைப்பெருமாள் சுவாமி சொன்னவாறே நடைபெற்றதை எண்ணிப் பிள்ளை வியப்பும் விம்மிதமும் உற்றார். மலைப்பெருமாள் ஜீவசமாதிக்கு மேலே கொலுவீற்றிருக்கும் சிவலிங்கத்தை தரிசிக்கும்போதே மனசுக்குள் அவர் அருள் சிலீரிடுகிறது.
ஊர்ப் பெரியவர்கள் அவருடைய அற்புதங்களை விளக்கும்போது மலைப்பு நெஞ்சை விம்மச் செய்கின்றது. இன்றும் அருவமாக சமாதி கொண்டிருக்கும் சுவாமி, நம்மையே பார்த்துகொண்டிருப்பது போலவும், தன் அருளை வாரி வழங்குவது போலவும் நாம் உணர்வதைத் தவிர்க்க முடியாது. இக்கோயிலில் சூரியனும், சனி பகவானும் ஒரே மேடையில் கொலுவீற்றிருப்பது காணுதற்கரிய காட்சி.
அருகே பைரவர் சந்நதி. சித்தர் பெருமான் திருவீதி உலா வரும் ரிஷப வாகனம் தனியே அழகுற காட்சியளிக்கிறது. அரச மரமும், வேம்பும் இணைந்து தலவிருட்சமாக குளிர்ச்சியளித்து கொண்டிருக்கிறது. சுவாமி கோயிலுக்கு அருகே கமலாம்பிகை அன்னைக்கு தனியே ஓர் ஆலயம் உள்ளது.
கருணைக் கடாட்சமாக ஒளிரும் அம்பாள் தன் தாய்ப் பார்வையாலேயே நம் துயரங்களைக் களைந்துவிடுகிறாள். படிகளுடன் கூடிய திருக்குளம் சற்றே வற்றிக் காணப்படுகிறது. இவை தவிர அருட் சித்தர் வசித்த இல்லமும் கோயிலாகப் பரிணமிக்கப் போகிறது. இத்தனை சிறப்பு மிக்க சித்தர் கோயில் புணரமைக்கப்படவிருக்கிறது.
சித்தர்களின் அடியவர்கள் மட்டுமல்லாமல், பிற பக்தர்களும் இக்கோயில் திருப்பணி பெற அனைத்து உதவிகளையும் ஸ்ரீமலைப் பெருமாள் கோயில் டிரஸ்ட் என்ற பெயருக்கு, நிர்வாக அறங்காவலர், ஸ்ரீமலைப்பெருமாள் கோயில் டிரஸ்ட், 9. ஆலத்தூர், வழி-நிரவி, நாகை மாவட்டம் - 609 604 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.


மலைப்பெருமாள் சுவாமிக்கு ஆண்டுதோறும் ஆவணி மக நட்சத்திர நாளன்று விழா தொடங்கிப் பத்து நாட்கள் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அப்பொழுது ஆலத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டுவிடும். மக்கள் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பார்கள். கோயிலோ புதுப்பொலிவு கொண்டு விளங்கும். விழாவானது ஒவ் வொரு நாளும் ஒவ்வொருவர் உபயமாக அமையும். பத்து நாட்களும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், அடியவர்க்கு அன்னதானமும் உபயதாரர்களால் செய்யப்படுகின்றன. ஆலத்தூருக்கு வாருங்கள்; அற்புத தரிசனம் காணுங்கள். என்றென்றும் ஆனந்தமாக வாழுங்கள்.

Monday, March 23, 2009அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஸ்ரீ மலைப்பெருமாள் சுவாமி சித்தர்

சித்தர்கள் அனைவரும் எல்லாம் வல்ல இறையருளால் நெற்றிக்கண் திறக்கப்பட்டு சமுதாயத்திற்கு பல நன்மைகளை செய்துள்ளனர். பல் வேறு கால கட்டங்களில் அவர்கள் ஆற்றிய பெரும் பணி போற்றுதலுக்குரியது. 18ம் நூற்றாண்டும் 19 ம் நூற்றாண்டிலும் தோன்றிய மகான்கள் மற்றும் சித்தர்கள் நாட்டின் பெரும் வளர்ச்சிக்கு அடிகோளாக இருந்திருக்கின்றனர்.

ஸ்ரீ ராக வேந்திரர், ஸ்ரீ தாயுமானவர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள், ஸ்ரீரமணர், மற்றும் ஸ்ரீ குமார தேவர்
போன்றவர்களின் சமுதாய பார்வை போற்றுதலுக்கு உரியது. இத்தகைய சித்தர்களின் ஒருவர்தான் 18-ம் நூற்றாண்டில் காட்டுச்சேரியில் பிறந்து ஆலத்தூரில் தங்கி அஷ்டமா சித்துகள் பல செய்து மக்களின் துயரங்களை நீக்கியவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ மலைப்பெருமாள் சித்தர் சுவாமிகள். இவர் ஜீவகாருண்யத்தை பெரிதும் வலியுறுத்தினார். அகப் பூஜையே சிறந்தது என்றார். இவருடைய கருத்துகள் ஆற்றிய பணிகள் எல்லாம் ஜீவகாருண்யத்தை வலியுறுத்துகின்றன. சாதி, மத வேறுபாடு வேண்டாம், தன்னையறிந்தவன் கோயிலுக்கு செல்ல வேண்டாம் , ”நான்” என்ற சொல் அகன்றால் இறை உண்மை விளங்கும், என்று மிக எளிய முறையில் சீர்திருத்தம் செய்துள்ளார்.

நிர்விகல்ப சமாதி-ஜீவ சமாதி மூலம் தன்னை பரிதாபி வருடம் 1852 ஆகஸ்டு 11ம் நாள் புதன் கிழமை பூர்வ பட்சம் ஏகாதசி திதி மூல நட்சத்திர நன்னாளில் இரவு மணி 12 க்கு எல்லாம் வல்ல பரம்பொருளோடு ஐக்கியப் படுத்திக் கொண்டு இன்றும் மக்களின் பல துயரங்களை போக்கி கொண்டிருக்கிறார்.

இவ்வாலயத்தில் தியான மண்டபம் (ரூ.6 இலட்ச மதிப்பில்) தயவுத்திரு சிவ.ஜெயக்குமார், பரம்பரை அறங்காவலர், ஸ்ரீமலைப்பெருமாள் சித்தர் பீடம் -அவர்களால் கட்டப்பட்டுள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் , காரைக்கால் மாவட்டங்களில் இதுபோல் ஒரு தியான மண்டபம் இல்லையெனலாம். மிக ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது.


இவ்வாலயத்தில் இவரை தரிசிக்கும் போது வாழையடி வாழையென என்று தொடங்கும் திருவருட்பா பாடல் ஞாபகம் வருகிறது.

காரைக்காலில் இருந்து ஆலத்தூர் மலைப்பெருமாள் சுவாமி சித்தர்பீடம் சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கோயில் நிர்வாகம் சுமார் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்குகிறது.


*************************