அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஸ்ரீ மலைப்பெருமாள் சுவாமி சித்தர்
தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஸ்ரீ மலைப்பெருமாள் சுவாமி சித்தர்
சித்தர்கள் அனைவரும் எல்லாம் வல்ல இறையருளால் நெற்றிக்கண் திறக்கப்பட்டு சமுதாயத்திற்கு பல நன்மைகளை செய்துள்ளனர். பல் வேறு கால கட்டங்களில் அவர்கள் ஆற்றிய பெரும் பணி போற்றுதலுக்குரியது. 18ம் நூற்றாண்டும் 19 ம் நூற்றாண்டிலும் தோன்றிய மகான்கள் மற்றும் சித்தர்கள் நாட்டின் பெரும் வளர்ச்சிக்கு அடிகோளாக இருந்திருக்கின்றனர்.
ஸ்ரீ ராக வேந்திரர், ஸ்ரீ தாயுமானவர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள், ஸ்ரீரமணர், மற்றும் ஸ்ரீ குமார தேவர்
போன்றவர்களின் சமுதாய பார்வை போற்றுதலுக்கு உரியது. இத்தகைய சித்தர்களின் ஒருவர்தான் 18-ம் நூற்றாண்டில் காட்டுச்சேரியில் பிறந்து ஆலத்தூரில் தங்கி அஷ்டமா சித்துகள் பல செய்து மக்களின் துயரங்களை நீக்கியவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ மலைப்பெருமாள் சித்தர் சுவாமிகள். இவர் ஜீவகாருண்யத்தை பெரிதும் வலியுறுத்தினார். அகப் பூஜையே சிறந்தது என்றார். இவருடைய கருத்துகள் ஆற்றிய பணிகள் எல்லாம் ஜீவகாருண்யத்தை வலியுறுத்துகின்றன. சாதி, மத வேறுபாடு வேண்டாம், தன்னையறிந்தவன் கோயிலுக்கு செல்ல வேண்டாம் , ”நான்” என்ற சொல் அகன்றால் இறை உண்மை விளங்கும், என்று மிக எளிய முறையில் சீர்திருத்தம் செய்துள்ளார்.
நிர்விகல்ப சமாதி-ஜீவ சமாதி மூலம் தன்னை பரிதாபி வருடம் 1852 ஆகஸ்டு 11ம் நாள் புதன் கிழமை பூர்வ பட்சம் ஏகாதசி திதி மூல நட்சத்திர நன்னாளில் இரவு மணி 12 க்கு எல்லாம் வல்ல பரம்பொருளோடு ஐக்கியப் படுத்திக் கொண்டு இன்றும் மக்களின் பல துயரங்களை போக்கி கொண்டிருக்கிறார்.
இவ்வாலயத்தில் தியான மண்டபம் (ரூ.6 இலட்ச மதிப்பில்) தயவுத்திரு சிவ.ஜெயக்குமார், பரம்பரை அறங்காவலர், ஸ்ரீமலைப்பெருமாள் சித்தர் பீடம் -அவர்களால் கட்டப்பட்டுள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் , காரைக்கால் மாவட்டங்களில் இதுபோல் ஒரு தியான மண்டபம் இல்லையெனலாம். மிக ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் இவரை தரிசிக்கும் போது வாழையடி வாழையென என்று தொடங்கும் திருவருட்பா பாடல் ஞாபகம் வருகிறது.
காரைக்காலில் இருந்து ஆலத்தூர் மலைப்பெருமாள் சுவாமி சித்தர்பீடம் சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கோயில் நிர்வாகம் சுமார் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்குகிறது.
*************************